விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம் - ஆட்சியர் உட்பட அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட்

Jun 19, 2024 - 20:02
விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம் - ஆட்சியர் உட்பட அதிகாரிகள் கூண்டோடு சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உட்பட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தாலும் போதைக்காக மலிவான பொருட்களை நாடி சென்று உயிரிழக்கின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார். அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை நாடி வந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் சட்டவிரோத விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், வடிவு, சேகர், ஜெகதீஷ், பிரவீன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, மணி, இந்திரா, ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பான விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணியிடை நீக்கம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரஜத் சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

அதோடு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையா ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி, காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow