பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது 

கம்யூட்டர் ஆபரேட்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட வேண்டும் என அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

Oct 18, 2024 - 13:40
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது 
arrest

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நியு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியில் பூனைகுட்டைப் பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (26) என்ற  திருமணமாகி கணவனை இழந்த பெண் தற்காலிகக் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்வழிச் சான்று அப்ரூவல் கொடுக்கும் வேலையை ஆனந்தி செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது தலைமை ஆசிரியர் இந்த வேலையைச் சரியாக செய்தால் உனக்கு ஒரு முத்தம் கொடுப்பதாக ஆனந்தியிடம் கூறியுள்ளார். அதற்கு ஆனந்தி வேண்டாம் சார் இது தவறு எனக் கூறியுள்ளார். இருந்தபோதும் சற்றும் எதிர்பாக்காத நிலையில் ஆனந்திக்கு தலைமையாசிரியர் முத்தம் கொடுத்துள்ளார். இதனால் பயந்த ஆனந்தி இந்த சம்பவம் குறித்து தங்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தியின் உறவினர்கள் கடந்த 15ம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் ஜோலார்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர் அசோக் குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடம் நடந்தவற்றை பெண் புகாராக அளித்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலைமையாசிரியர் சுப்பிரமணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் இன்று பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தலைமையாசிரியர் இது போன்ற தவறை செய்திருக்க மாட்டார் எனக் கூறியும், மீண்டும் தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வரவேண்டும் எனக் கோரி பள்ளியின் கேட்டைப் பூட்டி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் பள்ளி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow