IPL: “யாருயா நீ” - 6வது விக்கெட்டாக இறங்கி விளாசிய ஷஷாங் சிங்!- the real jersey
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஷஷாங் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் இமலாய இலக்கை எட்டி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் ஓபனரும் கேப்டனுமான, சுப்மன் கில் அதிரடியாக ரன்களை குவித்தார். அவர் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 48 பந்துகளில் 89 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வில்லியம்சன், சாய் சுதர்ஷன் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோர் தங்கள் பங்குக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது.
20 ஓவர்களில் 200 ரன்கள் எட்ட வேண்டும் என்ற இமலாய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கேப்டன் ஷிகர் தவான், ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் பெவிலியன் திரும்பியதால் திணறிய பஞ்சாப் அணி தோல்வி அடையும் என்றே ரசிகர்கள் பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர்.
ஆனால் 6வது விக்கெட்டாக களமிறங்கிய ஷஷாங் சிங் மன கணக்கை பொய்யாக்கி, அதகளம் காட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி கையை விட்டு செல்வதை உணர்ந்த குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா, மாற்றி மாற்றி பீல்ட் செட் செய்தும் பலனளிக்கவில்லை. ஷஷாங் ரன்களை மின்னல் வேகத்தில் குவித்துக்கொண்டிருந்தார். அவர் வெறும் 29 பந்துகளில் 61 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.
ஐபிஎல்லில் 2022ஆம் ஆண்டு அறிமுகமான ஷஷாங் சிங், உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை கிரிக்கெட் கிளப்பில் விளையாடி வருகிறார். கிரிக்கெட்டர்கள் தங்கள் கெரியரை 30 வயதுக்குள் முடித்துக்கொள்கின்றனர். ஆனால், ஷஷாங் சிங் 30 வயதில் தான் தனது அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?