தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடும் காங்கிரஸ்... என்னென்ன திட்டங்கள் இடம்பெறும்..?
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (5-4-24)வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் ஈடுபட்டு வந்தன. இதற்காக, இரண்டு கட்சிகளும் ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்திருந்தன. அதன்படி, பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமனும், துணை ஒருங்கிணைப்பாளராக பியூஷ் கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட உள்ளனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?