ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா - பிரதமர் பெருமிதம்

ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா தான் என்று நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Feb 10, 2024 - 18:09
ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா - பிரதமர் பெருமிதம்

17வது மக்களவை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், 17வது மக்களவை கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். மிகவும் கடிமான காலகட்டத்தை சபாநாயகர் சிறப்பாக வழி நடத்தியதாகவும் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சீர்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கம் ஆகியவற்றை கொண்டு தங்களது தாரக மந்திரமாக கொண்டு பாஜக அரசு செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

ஜி-20 மாநாட்டின் மூலம் இந்தியாவின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளதாகவும்,  உலகின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளதாகவும் மக்களவையில் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். கொரோனா காலகட்டத்தில் கூட இந்திய நாட்டின் வளர்ச்சி தடைபடவில்லை என்றும் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருமாறியுள்ளதாகவும் ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உலகின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது எனவும் அவர் கூறினார். ஒரு தேசத்திற்கு இரண்டு அரசியலமைப்பு சட்டங்கள் இருக்கக் கூடாது என்று கூறிய பிரதமர், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கான தேவையான சமூக நீதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

முத்தலாக் தடை சட்டமும், மகளிர் இடஒதுக்கீடும் இந்த அவையில் தான் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், முத்தலாக் தடை சட்டம் நீக்கப்பட்டதால் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டில் தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும், இதனால் ஏராளமானோர் தங்களது இன்னுயிரை இழக்க நேரிட்டதால் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இந்தியா அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow