IND vs ENG: கில்லா? சிராஜா? கடைசி நேரத்தில் முடிவை மாற்ற விரும்பிய மெக்கலம்!
நடைப்பெற்று முடிந்த இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் கடைசி நேரத்தில் சுப்மன் கில்லுக்கு பதிலாக சிராஜினை தொடர் நாயகனாக தேர்வு செய்ய மெக்கலம் முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இறுதி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. பரபரப்பாக நடைப்பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.
ஐந்தாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் ஆட்டநாயகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் நாயகனாக இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தேர்வாகினர்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் சுவாரஸ்யமான தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு-
”ஓவல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் நிறைவில், இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக்கை தொடர் நாயகனாக கவுதம் கம்பீர் தேர்வு செய்த நிலையில், ஷுப்மன் கில்லை தொடரின் நாயகனாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தேர்வு செய்திருந்தார்.
மைக் ஏதர்டனும் கோப்பை வழங்கும் தருணத்தில் தொடர் நாயகனிடம் கேட்பதற்கான கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தார். ஆனால், இறுதி நாளில் சிராஜின் அபாரமான பந்து வீச்சினை கண்டு தன் பரிந்துரை முடிவை மெக்கலம் மாற்ற விரும்பியதாக தெரிவித்துள்ளார். அதாவது, சுப்மன் கில்லுக்கு பதிலாக, சிராஜினை தொடரின் நாயகனாக தேர்வு செய்ய விரும்பியுள்ளார்” என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஓவல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட்கள் இருந்தது. இங்கிலாந்து அணியே வெற்றிப்பெறும் என பலர் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அசத்தினர். அதிலும் குறிப்பாக சிராஜ் அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியினை உறுதி செய்தார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் என மொத்தம் கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டும் 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார் சிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்கல்லம் புகழாரம்:
”கிட்டத்தட்ட 80 ஓவர்கள் வீசப்பட்ட பழமையான பந்தில், சிராஜ் பிரமாதமாக பந்து வீசினார். அவர் கையில் பந்தை வைத்திருந்த ஒவ்வொரு முறையும் முழுமையான ஆற்றலுடன் பந்து வீசினார். ஒரு தொடரையே மாற்றக்கூடிய மந்திரங்களில் இதுவும் ஒன்று. அதனை தான் சிராஜ் இறுதி நாளில் செய்தார்” என பிரண்டன் மெக்கல்லம் சிராஜினை புகழ்ந்து பேசியுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிராஜ், அனைத்து போட்டிகளிலும் விளையாடினார். இந்தத் தொடரில் மட்டும் 185.3 ஓவர்கள் வீசியுள்ளார். இதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, “நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும் போதுஇது ஒரு பிரச்சினையில்லை. என் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த முயலும் என முழுமையாக நம்பினேன்” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






