வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
கான்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட்ட் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இத்தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டி கான்பூரில் நடைபெற்றது.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இடையே மழை காரணமாக ஆட்டம் தடைபட்டு பின்னரே தொடங்கப்பட்டது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி, நான்காவது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த பிறகு டிக்ளேர் செய்தது.
அதனைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்தார். 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் குவித்து இரண்டாம் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக 2 - 0 என்கிற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இரண்டாம் ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸ்களில் 72/51 என ரன்கள் குவித்த இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இரண்டாம் ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருதும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
What's Your Reaction?