கோவையில் எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி- அலட்சியம் காட்டுகிறதா சுகாதாரத்துறை?

சிறுவன் உயிரிழந்ததை அடுத்து மருத்துவ குழுவினர் இன்று பருவாச்சி காட்டூர் பகுதியில் சிறப்பு முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Oct 1, 2024 - 15:46
கோவையில் எலிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலி- அலட்சியம் காட்டுகிறதா சுகாதாரத்துறை?

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள பருவாச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி- நிர்மலா தம்பதியினர், இவர்களின் இரண்டாவது மகன் தினேஷ்குமார் (13), அருகிலுள்ள அரசு  பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.தினேஷ்குமாருக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெப்த்திரியா பாக்டீரியா கிருமி இருப்பதால் இதற்கான மருந்து அரசு மருத்துவமனையில் மட்டுமே உள்ளது எனவும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் தினேஷ் குமாரின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என குற்றச்சாட்டும் அவரது பெற்றோர்கள் சுமார் ஒரு வாரமாக அனைத்து வகை பரிசோதனைகளை மேற்கொண்டும் கடந்த 28ஆம் தேதிதான் எலிக்காய்ச்சலால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி 29ஆம் தேதி இரவு உயிரிழந்தான்.  சிறுவன் உயிரிழந்ததை அடுத்து மருத்துவ குழுவினர் இன்று பருவாச்சி காட்டூர் பகுதியில் சிறப்பு முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அப்பகுதி மக்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையே அதே கிராமத்தைச் சேர்ந்த ரதி (34) என்ற பெண்மணிக்கு எலிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததன் காரணமாக நேற்று ஈரோடு அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், எலிக்காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow