கோவையில் பணப்பட்டுவாடா.. அண்ணாமலையை தோற்கடிக்க முயற்சியா? அதிமுக, திமுக மீது பாஜக புகார்

கோவையில் திமுக மற்றும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Apr 18, 2024 - 19:24
கோவையில் பணப்பட்டுவாடா.. அண்ணாமலையை தோற்கடிக்க முயற்சியா? அதிமுக, திமுக மீது பாஜக புகார்

தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 19) நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், கோடிக்கணக்கில் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் , பல்வேறு பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அரசியல் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வருகின்றன. இந்நிலையில், கோவையில் அதிமுக மற்றும் திமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கிராந்திகுமார் பாடியிடம், கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அண்ணாமலையின் வெற்றியை தடுக்கும் வகையில், திமுகவினர் வாக்காளர்களுக்கு சராசரியாக 2000 ரூபாய், அதிமுக சார்பில் தலா 1000 ரூபாய் என வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 15ஆம் தேதி இரவு கோவை நகரப் பகுதியில், பணப்பட்டுவாடா செய்த திமுக உறுப்பினர்கள் குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்த நிலையில், சி.எஸ்.ஆர் மட்டுமே பதிவு செய்துவிட்டு அவர்களை விடுவித்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது 

இதன் காரணமாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுக மற்றும் திமுகவினர் மீது பாரபட்சமின்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow