RTI-கீழ் தேர்தல் பத்திர வழிமுறைகளை வெளியிட SBI மறுப்பு.. காரணம் இதுதான்...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திர வழிமுறைகளை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
தாம் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு நபரோ அல்லது நிறுவனமோ SBI இடமிருந்து தேர்தல் பத்திரங்களை பெற்று நன்கொடை வழங்கும் நடைமுறையை மத்தியஅரசு முன்னதாக அறிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் பத்திர நடைமுறையை சட்டவிரோதம் எனக்கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகளின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து SBI வெளியிட்ட தகவல்களின்படி, மொத்த நிதியில் பாஜக 50 சதவிகிதத்திற்கும் மேல் நிதிபெற்றது தெரியவந்தது.
இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்காக வங்கிகளுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகள் தொடர்பான தகவல்கள் கோரி சமூகஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் மனு அளித்திருந்தார். பத்திரங்களை விற்பது, திரும்பப் பெறுவது தொடர்பாக தங்கள் கிளைகளுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் என்ன என்பது தொடர்பாக அதில் கோரப்பட்டிருந்தது.
இதற்கு SBI துணை பொதுமேலாளர் எம்.கண்ணபாபு அளித்த பதிலில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 8(1)(D)-ன் கீழ் வழிகாட்டுகதல்கள் தகவல்களை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார். வணிக நம்பிக்கை, வர்த்தக ரகசியங்கள், அறிவுசார் சொத்துக்கள் உள்ளிட்டவற்றுடன் அத்தகவல்கள் தொடர்பில் உள்ளதால் அதனை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
What's Your Reaction?