அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மீண்டும் விசாரணை செய்க - ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி!!
மார்ச் 28ஆம் தேதிக்குள் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்தவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
2006 - 2011 ஆம் ஆண்டு கால திமுக ஆட்சியின்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி. கடந்த 2008ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கும் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி கடந்த 2016ஆம் ஆண்டு ஐ.பெரியசாமி, எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு அதே கோரிக்கையை முன்வைத்து ஐ.பெரியசாமி மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் கீழமை நீதிமன்றங்களின் மாஸ்டர் ஆப் ரோஸ்டர் பொறுப்பிலிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
மேலும், முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட அவர், ஜூலை மாதத்திற்குள் வழக்கைத் தினமும் விசாரிக்க வேண்டும். அன்றாடம் நடைபெறும் விசாரணை குறித்த விவரங்களை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு, விசாரணை நீதிமன்றம் அனுப்ப வேண்டும்.குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையைத் தாமதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டால், நீதிமன்ற காவலில் அடைக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.
அதேபோல் மார்ச் 28ஆம் தேதிக்குள் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்தவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய அமைச்சர் ஒருவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?