"நான் குற்றவாளின்னு கோர்ட் சொல்லட்டும்" - ஸ்ட்ரிட்-ஆக சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்...
நாள்தோறும் சம்மன்களை அனுப்புவதற்கு பதிலாக, நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை பொறுமையாக காத்திருக்க வேண்டும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பான அமலாக்கத்துறை சம்மனை 7-வது முறையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ள நிலையில், நாள்தோறும் சம்மன் அனுப்புவதை நிறுத்திவிட்டு நீதிமன்ற முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்களை மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் அமலாக்கத்துறையினர் அடுத்தடுத்து கைது செய்தனர்.
தொடர்ந்து 5 முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததை அடுத்து, டெல்லி நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது. இதற்கிடையே தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை பாஜக பேரம் பேசுவதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டிய நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 6 மாதங்களுக்கு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றார்.தொடர்ந்து இன்று நேரில் ஆஜராக 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், இந்த முறையும் அமலாக்கத்துறை சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். அதே நேரத்தில், டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதாகவும், அடுத்த விசாரணை மார்ச் 16ஆம் தேதி நடைபெறுவதால், நாள்தோறும் சம்மன்களை அனுப்புவதற்கு பதிலாக, நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை பொறுமையாக காத்திருக்க வேண்டும் எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
What's Your Reaction?