"எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.." உண்மையை ஒப்புக்கொண்ட AstraZeneca? இது விளக்கமா? வாக்குமூலமா?
கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராசெனகா, தனது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என, பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தது, உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்நிறுவம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
கோவிட் காலத்தில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், பிரிட்டனில் உள்ள ஆஸ்ட்ராசெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிட்யூட் உற்பத்தி செய்து, பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட தனது குழந்தைகளின் மூளைப்பகுதியில் ரத்தம் உறைவு பிரச்னை ஏற்பட்டதாகவும், அதற்கு தடுப்பூசியே காரணம் எனவும் கூறி, ஜேமி ஸ்காட் என்பவர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்காக 100 மில்லியன் பவுண்ட் அளவில் நிவாரணமும் அவர் கேட்ட நிலையில், இதேபோன்று 51 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதனை ஆஸ்ட்ராசெனக்கா நிறுவனம் முற்றிலும் மறுத்தபோதும், தங்களது தடுப்பூசியை பயன்படுத்தும்போது ரத்த உறைதல், ரத்தத்தட்டுகள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் அந்நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அவ்வாறு ஏன் ஏற்படுகிறது எனத் தெரியவில்லை எனவும் அதில் கூறப்பட்டது. இத்தகவல், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவிஷீல்டு செலுத்திக்கொண்டோர் பீதியில் உறைந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ஆஸ்ட்ராசெனக்கா நிறுவனம், அன்புக்குரியோரை இழந்தவர்களுக்கும், உடல்நலப் பிரச்னைகள் தொடர்பாக புகாரளிப்போருக்கும் தங்களது அனுதாபங்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பே தங்களின் உயர்ந்த முன்னுரிமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் உட்பட தங்களின் அனைத்து மருந்துகளும் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, ஒழுங்குமுறை அதிகாரிகள் தெளிவான மற்றும் கடுமையான வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் அறிவித்துள்ளது.
மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனக்கா விளக்கமளித்துள்ள போதும், அனுதாபங்களை தெரிவித்ததன் மூலம், தங்கள் தடுப்பூசி மூலம்தான் மரணம் ஏற்பட்டது என்பதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டதா என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைப் போலவே, தற்போதைய இந்த விளக்கமும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?