காஸா போர்.. இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்.. ஹமாஸ் படைத் தலைவர் குடும்பத்தில் 6 பேர் பலி
காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் படைத் தலைவரின் 3 மகன்களும், 3 பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 240க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.
இதனால் காசாவில் உள்ள ஹமாஸ் போராட்டக்குழுவின் மீது இஸ்ரேல் போர் தொடுக்க ஆரம்பித்தது. மேலும் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதையடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த போரில் இஸ்ரேலியர்கள் ஆயிரத்து 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 23 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதற்கிடையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 10) காசாவில் உள்ள அகதிகள் முகாமை குறி வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் படைத் தலைவரான இஸ்மாயின் ஹனியேவின் 3 மகன்களும், 3 பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை இஸ்மாயின் ஹனியே உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், பாலஸ்தீன தலைவர்களின் குடும்பத்தினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினாலும், ஹமாஸ் அமைப்பினர் ஒரு போதும் பின்வாங்க மாட்டார்கள் என்றும் இந்த படுகொலைகளால் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது ஹமாஸ் அமைப்பின் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?