கிணற்றுக்குள் ஜே.சி.பி. இயந்திரம் விழுந்து டிரைவர் பலி!
தற்காலிகமாக வேலைக்கு வந்த மூர்த்தி விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஊர் கிணற்றை சுத்தம் செய்தபோது அதனுள்ளே ஜே.சி.பி தவறி விழுந்து ஏற்பட்ட விபத்தில் டிரைவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி எட்டாவது வார்டு பகுதியை சேர்ந்த சின்ன ஊர் மாங்குட்டைபாளையம்.மாங்குட்டைபாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அடுத்த வாரம் கும்பாபிஷேகத்திற்காக கோயில் அருகே உள்ள ஊர் கிணற்றை சுத்தப்படுத்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.
இதற்காக திருச்செங்கோட்டில் இருந்து ஜே.சி.பி வாகனத்தை வரவைத்து கிணற்றை சுத்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஜேசிபி கிணற்றுக்குள் தவறி விழுந்தது. ஜேசிபியை இயக்கி கொண்டிருந்த, கைலாசம்பாளையத்தை சேர்ந்த ஓட்டுநர் மூர்த்தி (35) ஜேசிபிக்குள் சிக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.ஜேசிபியுடன் விழுந்த மூர்த்தியை கிராம மக்களால் காப்பற்ற முடியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் பொக்லைன் உதவியுடன் கிணற்றுக்குள் மூழ்கிய ஜேசிபியை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.இறந்து போன மூர்த்திக்கு உமாதேவி என்ற மனைவியும், 10ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
கடந்த சில தினங்களாக ஜேசிபியை இயக்கி வந்த டிரைவர்கள் தீபாவளி விடுமுறையில் சென்று விட்டதால் தற்காலிகமாக வேலைக்கு வந்த மூர்த்தி விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊர் மக்களோ ”சக்தி வாய்ந்த ஊரை காக்கும் மாரியம்மன் இது. குட முழுக்கு நடக்க இருந்த வேளையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது மிகவும் வேதனையாக இருக்கிறது.கிணற்றில் ஓரத்தில் வேலை செய்தபோது, பேலன்ஸ் தவறி அப்படியே கிணத்தில விழுந்திட்டாரு. யாரலும் எதுவும் செய்ய முடியல.” என்கிறார்கள். ஊர்மக்கள் கிணற்றை சுத்தம் செய்யும்போது நடந்த தூர் சம்பவத்தால், கோவில் திருவிழாவைத் தள்ளி வைத்து விடலாமா? என்று யோசித்து வருகின்றனர்.
What's Your Reaction?