பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து
விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தும், அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்தனர்.
சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை, அவரது தாயாருடன் வசித்து வந்த சந்திரமோகன் என்பவர், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2016ல் நடந்த இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், மரபணு சோதனை அறிக்கையை ஏற்று, சந்திரமோகனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சந்திரமோகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, மரபணு சோதனை என்பது குற்ற வழக்குகளின் காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை நடைமுறை ஆகியவற்றில் முக்கிய கருவியாக இருப்பதால், அவற்றை திசு மாதிரிகளை சேகரிப்பது, முறையாக பேகச் செய்வது, பாதுகாப்பது போன்றவற்றில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் கரு கலைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கரு எப்போது கலைக்கப்பட்டது? சேகரிக்கப்பட்டது? பதப்படுத்தபட்டது? என்பது தொடர்பாக மருத்துவமனை சார்ந்த எந்த ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லாத நிலையில், சிறுமியின் கலைக்கப்பட்ட கருவிலிருந்து எடுக்கப்பட்ட திசு என காவல்துறை அளித்த சாட்சியத்தை அடிப்படையாக வைத்து குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டி, சந்திரமோகனை குற்றவாளி அல்ல என தீர்மானித்ததுடன், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தும், அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்தனர்.
What's Your Reaction?