28 ஆண்டுகளுக்குப்பின் JNU பல்கலை. மாணவர் தலைவராக தலித் தேர்வு.. யார் இவர்?

புகழ்பெற்ற டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் இடதுசாரி அமைப்பில் இருந்து போட்டியிட்டு 28 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக தலித் மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.

Mar 25, 2024 - 12:11
Mar 25, 2024 - 12:17
28 ஆண்டுகளுக்குப்பின் JNU பல்கலை. மாணவர் தலைவராக தலித் தேர்வு..  யார் இவர்?

டெல்லியில் உள்ள ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் போட்டி போட்டு சேர்வது வழக்கம். நிர்மலா சீதாராமன், சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், தாமஸ் ஐசக் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழக மாணவர்கள், தேசத்தின் மாணவர் பிரச்னைகளுக்கு எதிராக குரல்கொடுத்து சிறைசெல்வதும் தொடர்கதை. நாடு முழுவதும் இப்பல்கலைக்கழகத்தின் மாணவர் தேர்தல் உற்றுநோக்கப்படும் நிலையில், 4 ஆண்டுகளுக்குப்பின், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜே.என்.யூ மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட இடதுசாரிகள் ஒரு அணியாகவும், ABVP உள்ளிட்ட வலதுசாரிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.

இதில் ஜே.என்.யூ தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணை செயலாளர் என அனைத்து பொறுப்புகளையும் இடதுசாரி மாணவர்கள் கைப்பற்றினர். குறிப்பாக, 28 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த தனஜெயன் என்ற மாணவர் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ABVP-ஐ சேர்ந்த உமேஷை பின்னுக்குத் தள்ளி, அகில இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த தனஜெயன் 2,598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பீகாரின் கயாவைச் சேர்ந்த தனஜெயன், ஜே.என்.யூ-வில் Arts and Aesthetics பிரிவில் PhD பயின்று வருகிறார். வளாகத்தில் தண்ணீர், சுகாதாரம், உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்த அவர், தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் தலைவர்களை விடுவிக்க உழைப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, வெற்றிக்குப்பின் பேசிய தனஜெயன், இந்த வெற்றியின் மூலம் வெறுப்பு அரசியல் மற்றும் வன்முறையை மாணவர்கள் நிராகரித்துள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow