சில்லறைகளை சிதற விட்ட பிக்பாக்கெட் ராணி.. நகை போச்சே.. காப்பு போட்ட வேலூர் போலீஸ்
சென்னையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்த ஆந்திராவை சேர்ந்த பிரபல பிக்பாக்கெட் ராணியான விமலாவை வேலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எம்ஜிஆர் நகர் குண்டலகேசி தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, தனது சகோதரரின் திருமண நிகழ்வுக்காக செங்குன்றத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மாநகர பேருந்தில் கோயம்பேட்டுக்கு வந்த அவர், மற்றொரு பேருந்தில் அசோக் பில்லருக்கு சென்றுள்ளார்.
அசோக்பில்லரில் இருந்து வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் சென்ற போது, தனது பையை திறந்து பார்த்த நிலையில், அதில் இருந்த கம்மல், நெக்லஸ், ஆரம், செயின் என மொத்தம் 18 சவரன் நகைகள் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமி, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், பேருந்தில் பயணம் செய்த போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர், தனது அருகில் பர்சைத் திறந்த போது அதிலிருந்து சில்லறைகள் சிதறியதாகவும், அதனை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்ததாகவும் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதனை மையமாக வைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பேருந்து நிறுத்தம் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சில்லறைகளை சிதறவிட்ட பெண் நடந்து செல்லும் காட்சிகள் சிக்கியுள்ளன.
அதனை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கிய போலீசார், அந்த பெண்ணை வேலூரில் வைத்து கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர், ஆந்திராவை சேர்ந்த பிரபல பிக்பாக்கெட் ராணியான விமலா என்பதும், அவரே ராஜலட்சுமியிடம் இருந்து நகைகளை திருடினார் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர் மீது ஆந்திராவில் பல பிக்பாக்கெட் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பேருந்தில் சில்லறைகளை சிதற விட்டு பணம், நகைகளை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சில்லறைகளை சிதறவிட்டு பிக்பாக்கெட் அடித்த விமாலாவை வேலூரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
What's Your Reaction?