இயக்குநர் அமீரை சுத்துப்போட்ட NCB... பரபரப்பு பின்னணி...

director Aamir

Apr 3, 2024 - 08:23
இயக்குநர் அமீரை சுத்துப்போட்ட NCB... பரபரப்பு பின்னணி...

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் வழக்கில், விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கும் இயக்குநர் அமீரிடம், NCB தலைமை இயக்குநர் சத்யநாராயண் பிரதான் நேரடியாக விசாரணை திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, 12 மணி நேர விசாரணை நிறைவு பெற்ற நிலையிலும், அமீரை டெல்லியிலேயே தங்க வைக்க NCB முடிவு செய்திருப்பதால், இந்த வழக்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால், இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக போதைப் பொருள் ஏற்றுமதி செய்யப்படுவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அந்த அடிப்படையில், NCB நடத்திய சீக்ரெட் ஆப்ரேஷனில், மேற்கு டெல்லியில் உள்ள குடோனில் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கின. நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த இந்த கடத்தல் சம்பவத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது அம்பலமானது. 

கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக், திமுக அயலக அணி துணை அமைப்பாளராக பதவி வகித்தவர். அவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்த புகைப்படங்கள் வெளியானதால், கடத்தல் வழக்கு அரசியல் களத்திலும் சூடுபிடித்தது. இதனால், விசாரணையில் வளையத்திற்குள் அண்ணா அறிவாலயமும் சிக்கும் என்றும் தகவல்கள் கசிந்தன. அடுத்தடுத்து நிகழ்ந்த பரப்புகளுக்கு மத்தியில், ஜாபர் சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கிய திமுக, அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜாபர் சாதிக் படத் தயாரிப்பில் இறங்கியிருந்ததும் தெரியவந்தது. குறிப்பாக, அவரது தயாரிப்பில், இயக்குனர் அமீர் இயக்கத்தில், இறைவன் மிகப்பெரியவன் என்ற படம் உருவானதும் தெரியவந்தது. இதனால், அமீருக்கும் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அமீர், கடத்தல் சம்பவத்தில் தனக்கு தொடர்பு கிடையாது என்றும், விசாரணைக்காக யார் எப்போது அழைத்தாலும், எங்கே வேண்டுமானாலும் ஆஜராக தயார் என கூறியிருந்தார். 

ஆனால், கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் அடுத்தடுத்து கைதானதால், ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்து அறிய, இயக்குநர் அமீருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ரம்ஜான் ஈத் நிறைவுற்றதும் ஆஜராவதாக கோரிக்கை கடிதத்தை அமீர் அனுப்பியிருந்த நிலையில், NCB அதை நிராகரித்தது. இதனால், வேறு வழியின்றி டெல்லியில் உள்ள NCB தலைமை அலுவலகத்தில், தமது வழக்கறிஞர்களுடன் இயக்குநர் அமீர் ஆஜரானார். 

அவரிடம் நடத்திய விசாரணையில், ஜாபர் சாதிக் எந்தெந்த வழிகளில் பணத்தை செலவழித்தார், அவர் தொடர்ச்சியாக சந்தித்த நபர்கள் யார் என்பன உள்ளிட்ட கேள்விகளை NCB அதிகாரிகள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் மதிய உணவு சாப்பிட்டபடியே அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்ட நிலையில், NCB தலைமை இயக்குநர் சத்யநாராயண் பிரதான் நேரடியாக அமீரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 12 மணிநேர விசாரணை நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அமீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவாரா? அல்லது மேலும் விசாரணைக்காக டெல்லியிலேயே தங்க வைக்கப்படுவாரா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், தாம் சென்னை திரும்பி கொண்டிருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாகவும் இயக்குநர் அமீர் தமது Whatsapp-ல் Status வைத்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow