வெளி நாடு டூர்.. கொடைக்கானலில் பயணிகளுக்கு விபூதி அடித்த வடமாநில கும்பல்.. தட்டி தூக்கிய போலீஸ்
வெளிநாடு டூர் போக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட நபர்களை குறி வைத்து பல லட்சம் பணம் பறித்துள்ளது வடமாநில கும்பல் ஒன்று. கொடைக்கானலில் 30 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொடைக்கானல் தற்போது அதிக அளவில் வைப் ஆகி வரும் வார்த்தை. தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த ஊருக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சுற்றிப்பார்த்து விட்டு செல்வார்கள். அதுவும் மஞ்சுமேல் பாய்ஸ் படம் வந்த பிறகு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எப்போது நகரமே டிராபிக்கில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த அளவிற்கு டூர் வருபவர்கள் குவிந்து வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு வரும் பயணிகளை குறி வைத்து அவர்களின் ஆசையை தூண்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது ஒரு கும்பல். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று சதுரங்க வேட்டையில் ஒரு வசனம் வரும் அப்படித்தான் சுற்றுலா வந்த நபர்களை வெளிநாடு இன்ப சுற்றுலா என்று கூறி வலை விரித்துள்ளது வட மாநில கும்பல்.
இதற்கு அவர்கள் முதலில் குறி வைப்பது வசதியான சுற்றுலா பயணிகளைத்தான். கவர்ச்சியாக பேசுவார்கள். விளம்பரங்களை காட்டுவார்கள். அதில் பரிசு விழுந்தால் வெளிநாட்டிற்கு டூர் போகலாம். அதுவும் ஒரு வருடத்திற்கு 7 நாட்கள் என 10 வருடத்திற்கு உலகம் முழுவதும் சுற்றி வரலாம் என்று சொல்லி பேசுவார்கள்.
இதற்கு கட்டணமாக அதிகமில்லை ஒரு நபருக்கு ஜஸ்ட் 175000 மட்டுமே கட்டணம் அதுவும் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று பேசி மனதை கரைப்பார்கள். அதை நம்பி பலரும் பணம் கட்டுவார்கள். அப்புறம் அந்த பணம் திரும்பவே வராது.
இப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கொடைக்கானலுக்கு சுற்றுலா போயிருந்தார். அவரை குறி வைத்த வடமாநில கும்பல் வெளிநாட்டு டூர் ஆசையை தூண்டியுள்ளது. அவரும் அதை உண்மை என்று நம்பி ஆன்லைனில் 2 நபர்களுக்கு 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினார். எப்போது டூர் கிளம்ப வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்காக அந்த கும்பல் கொடுத்த செல்போன் எண்ணையும், வெப்சைட்டையும் பார்த்த போதுதான் ராஜ்குமாருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்தது. வெப்சைட்டும் முடங்கி இருந்தது.
பணம் பறிபோய் விட்டதை நினைத்து பதறிப்போன ராஜ்குமார் கொடைக்கானல் காவல்நிலையம் சென்று உடனடியாக புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில், வட மாநிலத்தை சேர்ந்த பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 நபர்கள் சில மாதங்களாக இந்த மோசடியில் ஈடுபட்டதும், கொடைக்கானல் பேருந்து நிலைய பகுதியிலேயே வீடு மற்றும் பல அலுவலகம் வாடகைக்கு எடுத்து தங்கி பல சுற்றுலாப்பயணிகளிடம் ஏமாற்று வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதனையத்து ஹரியானாவை சேர்ந்த அணில் அஜய் மேக்சா,29, மும்பை தானேவை சேர்ந்த சுருதி,29 மும்பையை சேர்ந்த சாவாஜ், 30
ஒசாமா,25 ராகுல்சா 25 தெற்கு டெல்லியை சேர்ந்த சிவா 22 ஹிமாச்சல் பகுதியை சேர்ந்த தீபிகா 28 ஆகிய 7 நபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கும்பல் மோசடிக்கு பயன்படுத்திய ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், டேப்லட், போலி அடையாள அட்டை, பரிசு கூப்பன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அதே போல 30 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. சுற்றுலா வந்த நபர்களின் ஆசையைத் தூண்டி விட்டு ஆன்லைனில் பணம் பறித்த சம்பவம் கொடைக்கானலில் பரபரடப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?