திருவனந்தபுரம் பெண் மேயருடன் நடு ரோட்டில் சண்டை.. காருக்கு வழிவிடாத பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரனுடன் நடுரோட்டில் தகராறு செய்த கேரள மாநில பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Apr 30, 2024 - 18:08
திருவனந்தபுரம் பெண் மேயருடன் நடு ரோட்டில் சண்டை..  காருக்கு வழிவிடாத பஸ் டிரைவர் சஸ்பெண்ட்


கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் உள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே மேயரானதால் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றார். 

இந்தியாவின் இளம் மேயரான இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினரான சச்சின்தேவ் என்பவரை திருமணம் செய்துள்ளார் ஆர்யா ராஜேந்திரன். கோழிக்கோடு மாவட்டம், பாலுச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக சச்சின் தேவ் இருக்கிறார்.

கடந்த 27ஆம் தேதி தனது கணவர் சச்சின் தேவுடன் காரில் மேயர் ஆர்யா ராஜேந்திரன் சென்றுள்ளார். இரவு 9.45 மணியளவில் திருவனந்தபுரம் பிளாமூடு அருகே மேயரின் காருக்கு முன்னால் சென்ற கேரள மாநில சாலை போக்குவரத்து கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. நீண்ட நேரமாக அந்த பஸ் டிரைவர் மேயரின் காரை ஓவர்டேக் செய்யவிடாமல் பேருந்தை இயக்கியுள்ளார்.

இதனால் பஸ் டிரைவர் யாதுவுக்கும், மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது பஸ் டிரைவர் யாது, மேயர் ஆர்யாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தை அபாயகரமாக ஓட்டிச் சென்றதாகவும், தன்னை அவதூறாக பேசியதாகவும் பஸ் டிரைவர் மீது காவல் நிலையத்தில் மேயர் ஆர்யா ராஜேந்திரன் உடனடியாக புகார் அளித்தார்.

இதனையடுத்து பஸ் டிரைவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது மேயர் ஆர்யா ராஜேந்திரனை தனக்கு அடையாளம் தெரியாது என்றும், அவருடன் வாக்குவாதம் செய்ததாகவும் ஓட்டுநர் யாது கூறியுள்ளார். மேயர் ஆர்யா ராஜேந்திரனுடன் தகராறு செய்த கேஎஸ்ஆர்டிசி ஓட்டுநர் யாது மீது ஏற்கெனவே வழக்குகள் இருப்பதாக கேரளா மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில் யாதுவை சஸ்பெண்ட் செய்து கேரள மாநில சாலை போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow