தீவுத்திடலுக்கு இடம் மாறும் பிராட்வே பஸ் ஸ்டாண்டு.. குறளகமும் இடிப்பு!.. சென்னை மாநகராட்சி முடிவு
இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட உள்ளது
சென்னை பிராட்வேவில் உள்ள பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் சென்னையின் பழமைவாய்ந்த அடையாளங்களில் ஒன்று, பிராட்வே பேருந்து நிலையம். ஆரம்பகால சென்னை, பாரிமுனையைச் சுற்றி உருவானபோது, அங்கிருந்து பல ஊர்களுக்கு செல்லும் முக்கிய பேருந்து போக்குவரத்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் செயல்பட்டது. சௌகார்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வியாபாரத்துக்கும் பிராட்வே பேருந்து நிலையம் பெரும் பங்கு வகித்திருக்கிறது. தற்போதும் வடசென்னையைச் சென்றடையும் மக்களின் முக்கிய பேருந்து முனையமாக உள்ள பிராட்வே பேருந்து நிலையம், தற்காலிகமாக இடம் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிராட்வே பஸ் ஸ்டாண்டு எங்கே மாற்றம்
அரசின் பொருட்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் தீவுத்திடல் மைதானத்தில், இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் அனைத்தும் தீவுத்திடலில் நின்று, திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராட்வே பேருந்து நிலையத்தின் நிலை என்ன?
பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் வகையில் மல்டி மாடல் இண்டகிரேஷன் என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி அங்கே நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக பேருந்து நிலையம் முற்றிலும் இடிக்கப்பட்டு, பேருந்து முனையம் அமைக்க, கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகம் அமையவுள்ளதாக கூறப்படுகிறது.
குறளகம் இடிக்கப்படுமா?
பிராட்வே பேருந்து நிலையத்துடன் சேர்த்து, குறளகமும் இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை இடித்துவிட்டு, 10 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக அதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. அத்துடன், குறளகம், பிராட்வே போக்குவரத்து முனையம், மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?