கள்ளச்சாராய வேட்டை.. 7 போலீசார் மாயமா?.. கல்வராயன்மலையில் நடந்தது என்ன?
கல்வராயன்மலையில் அடர்ந்த வனப் பகுதியில் சாராய வேட்டைக்கு சென்ற போலீசார் 7 பேர் மாயமானதாக தகவல் பரவிய நிலையில் அதனை கள்ளக்குறிச்சி காவல்துறை மறுத்துள்ளது.தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 19ஆம் தேதி அதிக அளவில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்ததால் 59 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அடுத்தடுத்து பலரும் உயிரிழந்து வருவதால் இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய திமுக அரசையும் காவல்துறையினரையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
கள்ளசாராய வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை காவல்ழதுறையினர் கைது செய்து பேரல் பேரலாக அழித்து வருகின்றனர். 60 பேர் மரணமடைந்த பிறகுதான் விழித்துக்கொண்ட அரசு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் சமூக விரோதிகளால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்யவும், ஊறல்களை அழிக்கவும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பேரல் பேரலாக ஆயிரக்கணக்கான லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை முன்னிறுத்தி உறுதிமொழியும் எடுத்து வருகின்றனர்.
இதனிடையே கல்வராயன் மலைப்பகுதியில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கல்வராயன் மலையடிவாரப் பகுதிகளான பொட்டியம், மாயம்பாடி, மளிகைப்பாடி, கல்படை, மட்டபாறை, பரங்கிநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது. கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பட்டாலியன் போலீசார் அடங்கிய குழு கல்வராயன் மலையில் சாராயம் தயாரிக்கும் ஊறல்களைக் கண்டுபிடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கல்வராயன் மலைப் பகுதியில் தடுத்தாம்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்த 20 போலீசாரில் 7 பேர் மாயமானதாக தகவல் பரவியது.
தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த 20 போலீசாரில் 13 பேர் உணவு சாப்பிட, வனப்பகுதியை விட்டு வெளியேறியதாகவும், மீதமுள்ள 7 போலீசாரும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் வெளியே வராததால், மாயமான 7 பேரையும் எஞ்சிய போலீசார் தேடி வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது. மாயமான 7 பேரும் திருச்சி பட்டாலியனை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறை அதனை மறுத்துள்ளது. "கரியலூர் கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்குச் சென்ற 7 போலீசார் மாயம் என்ற செய்தி பரவி வருகிறது. மேற்படி 7 போலீசார் சாராய வேட்டை முடித்து ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்துள்ளனர். அனைவரும் இருப்பிடம் திரும்பி விட்டனர். அனைவரும் நலமாக உள்ளனர். தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
What's Your Reaction?