கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா… அரவான் களப்பலி… ஒப்பாரி வைத்த திருநங்கைகள்
லட்சக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்ற, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நிறைவடைந்தது. செவ்வாய் இரவு பூசாரி கையினால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் அரவான் பலியிடப்பட்ட உடன் விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநங்கைகள் குலதெய்வமாக கொண்டாடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநங்கைகளின் தாலி கட்டுதல் நிகழ்வும், அதைத் தொடர்ந்து அரவான் சிரசுக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து அரவாண் சிரசுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அரவாண் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. திருநங்கைகள் கூடி நின்று கும்மியடித்து ஆடிப்பாடினார்கள். இதையொட்டி திருத்தேரோட்டமும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, அலங்கரிக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தின்போது, விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள், தானியங்கள் மற்றும் சில்லரை காசுகளை, அரவான் மீது வீசி வணங்கினார்கள். மேலும் தேர் செல்லும் பாதையில் திருநங்கைகள் சூரத்தேங்காய்களை உடைத்து கற்பூரம் காட்டி, கும்மியடித்து வழிபட்டனர்.
தேர் தொட்டி, நத்தம் வழியாக பந்தலடி பகுதிக்கு தேர் சென்றடைந்த பின்னர், அங்க திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலியை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த மல்லிகை பூக்களை பிய்த்து எறிந்ததோடு, வளையல்களை உடைத்து, வெள்ளை சேலை அணிந்து விதவை கோலம் பூண்டு சோகமயமாக ஊருக்கு புறப்பட்டார்கள். அந்த காட்சி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.
What's Your Reaction?