தமிழக பக்தர்களை தவிக்க விட்ட கேரளா... கலங்கிய கண்ணகி பக்தர்கள்... தீர்வு காணுமா தமிழ்நாடு அரசு...
கண்ணகி கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர்களை மலையில் இருந்து இறங்குவதற்கு கேரள மாநில ஜீப்கள் ஏற்றாமல் தவிக்க விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை என்ற மலை உச்சியில் வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்யும் இக்கோயிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 7 கிலோ மீட்டர் துாரம் தமிழக வனப்பாதை உள்ளது. இதுதவிர கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கிலோ மீட்டர், துாரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது.
சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே திறக்கப்படும் இந்த கோயிலுக்கு, வாகனங்களில் செல்ல தார் சாலை வசதி கேரளப் பகுதியில் மட்டுமே உள்ளது. இதனால், நடக்க முடியாத பக்தர்கள் குமுளியிலிருந்து ஜீப்பில் செல்கின்றனர். அவ்வாறு கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர்கள் திரும்புவதற்கு, ஜீப்பில் ஏற அனுமதிக்காமல் கேரள பக்தர்களை மட்டுமே ஏற்றிச் சென்றுள்ளனர்.
1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயில், கண்ணகி கோயில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் 1893, 1896ல் நடத்திய சர்வேயும், 1913, 1915ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட எல்லை வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோயில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோயில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால், பக்தர்கள் அதிகமாக நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை பயன்படுத்த வேண்டி உள்ளது. இதை பயன்படுத்தி கோவில் கட்டுப்பாடு முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வரும் திட்டத்தை கேரளா செயல்படுத்தி வருகிறது.
கண்ணகி கோயில் விவகாரத்தில் தொடர்ச்சியாக பல சிக்கல்களை உண்டாக்கி வருகிறது கேரள அரசு. சேர மன்னன் செங்குட்டுவன் இமயத்தில் கல் எடுத்து கட்டிய இந்த கோயிலில் பெரும் பகுதி தமிழக எல்லைக்குள் தான் வருகிறது. தமிழ்நாடு அரசு தமிழக எல்லையில் உள்ள மலைப் பகுதியில் பாதை அமைத்தால் தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?