“ரூ.7 கோடியை திருப்பி தரவில்லை” மஞ்சுமெல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்கள் மீது பைனான்சியர் மோசடி புகார்
மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மோசடி செய்ததாக, அப்படத்தின் பைனான்சியர் சிராஜ் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதற்கு விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தில் இடம்பெற்ற குகையை முக்கிய களமாக கொண்டு, சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட மஞ்ஞும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே எதிர்பாராத வரவேற்பைப் பெற்றது.
மேலும், உலக அளவிலும் வெற்றியடைந்த இத்திரைப்படம், உலகம் முழுவதும், 236 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோர் மோசடி செய்ததாக, பைனான்சியர் சிராஜ் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், "மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு அவர் பணத்தை சொன்னபடி தரவில்லை. மேலும், படத்தின் தயாரிப்புக்காக கொடுத்த ரூ.7 கோடியை கூட திருப்பி தரவில்லை" என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு எர்ணாகுளம் நீதிமன்றம் மூலம் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர்கள் சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?