சிவகார்த்திகேயனுக்காக தமிழ் கற்ற கேரளப்பாடகி

இசையால் காதலித்து இணைந்த லின்சியின் திருமணத்தை ஒத்துக்கொள்ளாமல் இருந்த அவரது தந்தை, ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Feb 10, 2024 - 10:59
சிவகார்த்திகேயனுக்காக தமிழ் கற்ற கேரளப்பாடகி

‘சூப்பர் சிங்கர்’ சீனியர் நிகழ்ச்சியின் 10வது சீசன், கோலாகலமாக தற்போது நடைபெற்று வருகிறது. எப்போதும் போல், பல அற்புதமான திறமையாளர்களின் பங்களிப்பில், பல நெகிழ்வான சம்பவங்களுடன், பின்னணிப் பாடகர்களின் முன்னணி மேடையாக இந்நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. 

விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிநடை போட்டு வருகிற இந்த நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிய பின்னணியில் இருந்துவந்து, இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பல திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத்துறைகளிலும் கோலோச்சி வருகின்றனர். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக பலர் ஜொலித்து வருகின்றனர்.

பிரபல பின்னணிப் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா ஸ்ரீராம் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், கர்நாடக சங்கீதப் பின்னணி, கானா பாடல் பின்னணி எனப் பலவிதமான களத்தில் இருந்து, பலவிதமான போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.  

பாடும் திறமையை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில், பல நெகிழ்வான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் போட்டியாளர், சிவகார்த்திகேயனை சந்தித்துப் பேசவேண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, தற்போது தமிழில் எம்.ஏ பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். இவரின் இனிமையான குரல், அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.  

வெட்டிங் சுற்றில், பல குரல்களில் பாடி அசத்திய லின்சி எனும் போட்டியாளரின் கதையும் குரலும், பலரையும் நெகிழ வைத்தது. இசையால் காதலித்து இணைந்த லின்சியின் திருமணத்தை ஒத்துக்கொள்ளாமல் இருந்த அவரது தந்தை, ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். லின்சியைக் கட்டியணைத்து அவர் பாராட்டியது, அனைவரையும் உருக வைத்தது.

இப்படிப்பட்ட பல நெகிழ்வான சம்பவங்களோடு, பல திறமையாளர்களுக்கான அடையாளமாகவும் மாறியுள்ளது ‘சூப்பர் சிங்கர்’.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow