இலங்கை அடாவடி - மத்திய அரசு மெத்தனம் : டி.ஆர்.பாலு கண்டனம்

தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பாக மக்களவையில் விவாதித்து திமுக வெளிநடப்பு செய்த நிலையில், இலங்கையின் அடாவடித்தனமான நடவடிக்கையை மத்திய அரசு மெத்தனமாக கையாண்டு வருவதாக அக்கட்சியின் எம்.பி டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Feb 10, 2024 - 12:22
இலங்கை அடாவடி - மத்திய அரசு மெத்தனம் : டி.ஆர்.பாலு கண்டனம்

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தமிழ்நாடு மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்தம் படகுகள், பொருட்களை சிறைபிடிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 19 பேரை, இலங்கை படையினர் முன்னதாக கைது செய்தனர். மேலும் மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மீனவர்கள் 19 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து 28 நாட்களில் மட்டும் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 12 படகுகள் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வினை உறுதி செய்திடவும், மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிகளை மத்திய அரசு பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர்ந்து கைது செய்வது தொடர்பாக திமுக மக்களவைக் குழுத்தலைவர், நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் முன்வைத்தார். இதையடுத்து மக்களவையில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்காததை கண்டித்து தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக எம்.பிக்கள், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்தியஅரசு தீர்வு காணவில்லை என குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிப்பதாகக் கூறினார். இலங்கை அரசின் அடாவடிப் போக்கை இந்திய அரசு மெத்தனமாக அணுகுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow