தோல்வியை சந்தித்தாலும் எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகி கட்சியை 5 ஆக உடைத்திருக்கிறார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகி கட்சியை 5 ஆக உடைத்திருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் தன் ஆதரவாளர்களுடன் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்தத் தேர்தல் வந்தாலும், அதிமுகவில் எங்களது அணி இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்கும் என்பதில் உறுதியாக உள்ளோம் எனக் கூறினார்.
கடந்த நான்கரை ஆண்டுகள் பல தவறுகள் செய்திருந்தாலும், பாஜகவின் ஆதரவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது எனவும் பாஜக கூட்டணி முறிவு எடப்பாடியின் உச்சபட்ச துரோகம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், அமமுக பிரிந்து சென்றதால் சட்டமன்றத்தில் அதிமுக தோல்வியைத் தழுவியது எனவும் அப்போதும் எடப்பாடி பழனிச்சாமி திருந்தவில்லை எனவும் கூறினார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகி கட்சியை 5 ஆக உடைத்திருக்கிறார் என குற்றம்சாட்டிய அவர், தொடர்ந்து தொண்டர்களை இணைக்கும் முயற்சியினை தங்கள் அணியினர் மேற்கொண்டுள்ளனர் எனக் கூறினார்.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திலும் பங்கேற்றார். இதற்காக 3 நாட்களுக்கு முன்பு நெல்லை வந்த ஓபிஎஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2 நாட்கள் நெல்லை தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?