Lollu Sabha Seshu: 3 அடைப்பு 10 நாள் போராட்டம்… லொள்ளு சபா சேஷூ மறைவு… ச்சே அதுக்குள்ள இப்படியா..?
லொள்ளு சபா புகழ் சேசு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார், அவருக்கு வயது 60.
சென்னை: சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பூசாரியாக நடித்து காமெடியில் கலங்கடித்தவர் ‘லொள்ளு சபா’ சேசு. சந்தானம், மாறன் இருவருடனும் சேசு அடித்த லூட்டியில் ரசிகர்களின் வயிறே பஞ்சர் ஆனது. சந்தானம் கூட்டணியில் தவிர்க்க முடியாத காமெடி மெட்டீரியலாக வலம் வந்த சேசு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். எல்லாம் கூடி வந்த நேரம் சேசுவுக்கு இப்படியொரு பரிதாபமான முடிவா என ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேசுவின் இயற்பெயர் லட்சுமி நாராயணன், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரிமோட், தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படங்களில் நடித்து சினிமாவிலும் அறிமுகமாகியிருந்தார். ஆனாலும் லொள்ளு சபா நிகழ்ச்சி தான் சேசுவுக்கு சிறப்பான அடையாளம் கொடுத்தது. அப்போது முதல் சந்தானம் கூட்டணியில் ஆஸ்தான காமெடி நடிகராக வலம் வந்தார்.
அதேபோல் சுந்தர் சி உடன் வீராப்பு, விஜய்யின் வேலாயுதம், விஜய் ஆண்டனியுடன் இந்தியா பாகிஸ்தான் என விஜய் உட்பட முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார் சேசு. ஏ1 படத்தில் ‘அச்சச்சோ அவரா பயங்கரமான ஆளாச்சே..’ என சேசு அடிச்ச அந்த காமெடி, அவருக்கு அல்டிமேட் ரீச் கொடுத்தது. அப்படியே பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, குலு குலு என மீண்டும் சந்தானம் உடன் கூட்டணி சேர்ந்து காமெடி ட்ரீட் கொடுத்து வந்தார். இந்த நிலையில் தான், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதேநேரம் சேசுவின் சிகிச்சைக்காக திரை பிரபலங்கள் பலரும் உதவி வந்தனர். இந்நிலையில், மாரடைப்பு மட்டுமல்லாமல் நுரையீரல், கிட்னி ஆகியவையும் பாதிக்கப்பட்ட நிலையில் சர்ஜரி ஏதும் நடக்காமலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சேசு. அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேசுவின் மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?