Rathnam: “எனக்கே இந்த கதி… ரத்னம் ரிலீஸில் கட்டப் பஞ்சாயத்து..” கொதித்தெழுந்த விஷால்!
ரத்னம் திரைப்படத்தை வெளியிட விடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ரத்னம். ஹரி இயக்கத்தில் விஷால் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே விஷால் – ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. அதேபோல், ரத்னம் படமும் சம்பவம் செய்யுமா என அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், ரத்னம் படத்தோடு விஷாலையும் சேர்த்து வைத்து சம்பவம் செய்து வருகின்றனர் சிலர். இதுபற்றி விஷாலே தனது வாட்ஸப் மூலம் வாய்ஸ் நோட் போட்டுள்ளது கோலிவுட்டையே பரபரப்பாக்கியுள்ளது. அதில், திருச்சி, தஞ்சை ஏரியாக்களில் ரத்னம் படத்தை வெளியிட விடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம்சாட்டியுள்ளார். சினிமாவுக்கு தொடர்பில்லாத நபர் திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்து முடக்குவதாகக் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து திரையரங்க சங்கத் தலைவர் மீனாட்சியும் செயலாளர் சிதம்பரமும் பேச மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இவர்களால் மற்ற திரையரங்க உரிமையாளர்களும் தன்னை சுத்தலில் விடுவதாகவும், கடிதம் கொடுத்த நபரின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ரத்னம் படத்துக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது, இதில் நான் நடிகன் மட்டுமே எனக் கூறியுள்ள விஷால், தேவையில்லாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக புகார் தெரிவித்துள்ளார்.
விஷாலுக்கே இந்த கதி என்றால், ஒரு புதுமுக நடிகருக்கோ இல்ல புது புரொடியூசருக்கோ என்ன நடக்கும், அதற்காகவே இந்த பதிவு என்றுள்ளார். இப்படி கட்டப் பஞ்சாயத்து செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எதற்கு இப்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நீங்க எல்லாரும் வயசுல பெரியவங்க, என்ன மாதிரி வளார்ந்து வரும் கலைஞனை இப்படி கஷ்டப்படுத்த வேண்டாம் என்பதாக பேசியுள்ளார்.
விஷாலின் இந்த வாய்ஸ் நோட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது ரத்னம் படத்துக்கு ஃப்ரீ புரோமோஷனாக அமைந்துள்ளது. அதேநேரம், ரத்னம் படத்தின் ஆன்லைன் அட்வான்ஸ் புக்கிங் ஸ்டேட்டட்ஸை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதில், பெரும்பாலான தியேட்டர்களில் ரத்னம் படத்துக்கு ஒரு டிக்கெட் கூட புக் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?