சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை.. 10ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயற்சி.. 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடத்தப்பட்ட குழந்தை எண்ணூரில் மீட்கப்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு பணம் கொடுக்காமல் சென்று சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த சுஜித் மண்டல் தனது மனைவி சஞ்சனா மண்டல் மற்றும் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் சென்னை சென்ட்ரல் பகுதியில் வசித்து வருகிறார். பிளாட்பாரம் பகுதியில் சிறு சிறு வேலைகளை செய்து வரும் இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள மூர் மார்க்கெட் பகுதி, புறநகர் ரயில் நிலையம் என ஆங்காங்கே தங்கி இருந்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே மனைவி செல்போன் பார்த்துக்கொண்டிருந்தபோது, கவனக்குறைவால் குழந்தை தவழ்ந்து சென்றது. இதையடுத்து குழந்தையை காணவில்லை என சுஜித், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த அரசு ரயில்வே போலீசார் உடனடியாக சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு நபர்கள் குழந்தையை எடுத்துச் செல்வது தெரியவந்ததை அடுத்து மற்ற கேமராக்களில் கண்காணித்த போது ஏதும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் மற்ற காவல் நிலையங்களுக்கும் ரயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து, தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது எண்ணூர் பகுதியில் குழந்தையுடன் இரண்டு நபர்கள் சிக்கியிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து அங்கு சென்ற ரயில்வே போலீசார், அவர்களுடன் இருந்தது கடத்தப்பட்ட குழந்தை தான் என உறுதி செய்தனர்.
விசாரணையில், திருவொற்றியூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் பட்டினத்தார் கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் குழந்தைகளை கடத்துவதற்காகவே திட்டமிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து தேடி சுற்றியதும், பின்னர் அங்கு தனியாக இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு சாலை வழியாக நடந்து பாரிமுனை வரை சென்றுள்ளனர்.. பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி திருவொற்றியூர் தேரடி பகுதியில் இறங்கி மற்றொரு ஆட்டோ ஏறி அங்கிருந்து எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஆட்டோவிற்கு பணம் கொடுக்காமல் இருவரும் சென்றதால், ஓட்டுநருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சந்தேகமடைந்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்துவிட்டு, அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். இதனிடையே, கார்த்திக்கும் செல்வமும், ஒரு நபரிடம் பத்தாயிரம் ரூபாய் வரை குழந்தையை விற்பதற்காக விலை பேசிவிட்டு காத்துக்கொண்டிருந்தனர். இதேவேளையில் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்தனர்.
அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் யார் சொல்லி குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள், யாருக்கெல்லாம் கடத்தலில் தொடர்பு இருக்கிறது, யாரிடம் விலை பேசினார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தையை கடத்திய நபர்களை 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. அதேவேளையில், பரபரப்பான பகுதிகளில் நடந்துள்ள குழந்தை கடத்தல் சம்பவம் மக்களை அச்சமடையவும் செய்துள்ளது. இதனால் கவனமாக இருக்கும்படியும், குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்ளவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?