Aavesham Review: பெங்களூர் கேங்ஸ்டராக ஃபஹத் பாசில்... ஆவேசம் படம் எப்படி இருக்கு..? முழு விமர்சனம்

மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடித்துள்ள ஆவேசம் திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியானது. ஃபஹத் பாசில் கேங்ஸ்டராக நடித்துள்ள ஆவேசம் எப்படி இருக்கிறது என இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

Apr 15, 2024 - 11:28
Apr 15, 2024 - 21:26
Aavesham Review: பெங்களூர் கேங்ஸ்டராக ஃபஹத் பாசில்... ஆவேசம் படம் எப்படி இருக்கு..? முழு விமர்சனம்

சென்னை: ரோமன்சம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஜித்து மாதவன். முதல் படத்திலேயே ஹாரர் த்ரில்லர், காமெடி என மேக்கிங்கில் மிரட்டியிருந்தார். அவரது இரண்டாவது படமாக உருவாகியுள்ள ஆவேசம் ரம்ஜான் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியானது. ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் வரிசையில் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஃபஹத் பாசிலின் ஒன் மேன் ஷோவாக உருவாகியுள்ளது ஆவேசம்.  

பெங்களூருவில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கேரள மாணவர்கள் பலர் படிக்கின்றனர். அவர்களிடையே சீனியர் – ஜூனியர் மோதல் உருவாக, முதலாம் ஆண்டு மாணவர்களில் 3 பேரை, சீனியர் குட்டியின் கேங் ஒருநாள் இரவு முழுக்க வைத்திருந்து அடி வெளுத்து விடுகிறது. இதற்கு கண்டிப்பாக பழி வாங்க வேண்டும் என நினைக்கும் அந்த மாணவர்கள், லோக்கல் ரவுடியின் சப்போர்ட் தேடி பார் பாராக அழைகின்றனர். அவர்களுக்கு கேங்ஸ்டர் ரங்காவின் அறிமுகம் கிடைக்க, அதன்பின்னர் என்ன ஆனது என்பது தான் கதை.

ரங்காவாக ஃபஹத் பாசில், கேரளாவில் இருந்து பெங்களூர் வந்து ஜூஸ் கடையில் வேலை பார்ப்பவர், பின்னாளில் கேங்ஸ்டராக வலம் வருகிறார். படத்தின் ஆரம்பத்தில் காலேஜ், சீனியர் – ஜூனியர் மாணவர்கள் இடையேயான மோதல் என கதை எந்தப் பக்கம் போகிறது எனத் தெரியாமல் குழம்ப வைக்கிறது. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து அதன் பின்னர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் மொத்தமாக ட்ரீட் கொடுக்கிறார் ஃபஹத் பாசில். பாரில் இன்ட்ரோ ஆகும் சீன் முதல் க்ளைமேக்ஸ் வரை அதிரி புதிரியாக அதகளம் செய்துள்ளார் ஃபஹத்.  

முதல் பாதி முழுக்க காமெடி டான் போல கோமாளித்தனம் செய்யும் ஃபஹத் பாசிலை பார்த்து, இவர் உண்மையாகவே கேங்ஸ்டரா என மாணவர்களுக்கே சந்தேகம் வருகிறது. அதே காமெடி டான் ரங்கா, இறுதிக் காட்சியில் எடுக்கும் ரியல் அவதாரம் மாஸ் அன்ட் க்ளாஸ் ரகம். இண்டர்வெல் சீனில் ரசிகர்களுக்கு கொடுத்த ஹைப் சிலிர்க்க வைக்கிறது என்றால், க்ளைமேக்ஸில் ஃபஹத் பாசில் ஒத்தையாக கெத்து காட்டுவது மிரள வைக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஃபஹத் பாசில் நடிக்கவில்லை என்றால், ஆவேசம் கதையை படமாக எடுத்திருக்க முடியுமா என்பது பெரும் சந்தேகமே. இந்த சீன்… அந்த சீன் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு, ஸ்க்ரீனில் வந்தாலே நடிப்பில் அசுரத்தனம் என மெர்சல் செய்துள்ளார் ஃபஹத் பாசில்.  

அதேபோல் ஆவேசம் படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே ஃபஹத் பாசில் தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஜூஸ் கடையில் இருந்து ஃபஹத் பாசில் கேங்ஸ்டராக மாறுவது ஏன் என்பதற்கான சரியான பின்னணி கதையில் எங்குமே இல்லை. அம்மா, அண்ணன் ஆகியோருடன் ஃபஹத் பாசிலுக்கு இருந்த உறவுச் சிக்கல் என்ன, அதனால் உளவியல் ரீதியாக அவர் எப்படி பாதிக்கப்பட்டார் என்பதும் சொல்லப்படவே இல்லை. ஃபஹத் பாசில் பெங்களூருவில் பெரிய கேங்ஸ்டராக வளர்ந்தது எப்படி என்பதிலும் சுவாரஸ்யம் இல்லை. முக்கியமாக அவ்வளவு பெரிய கேங்ஸ்டருக்கு மன்சூர் அலிகானை வில்லனாக நடிக்க வைத்ததெல்லாம் கொஞ்சம் காமெடி ரகம் தான்.  

சில காட்சிகளில் ஃபஹத் பாசில் திரும்பி நிற்க, கேமரா அவரது பின்னால் இருக்கும். அப்போது ஃபஹத் என்ன ரியாக்‌ஷன் செய்தார் என்பதை க்ளைமேக்ஸில் காட்டியிருப்பார் இயக்குநர். இந்தப் படத்தின் ஜீவனே இக்காட்சி தான், அதன் பின்னர் ஃபஹத் பேசும் வசனங்களும் முக்கியமானவை. ஆனால் அவை அனைத்தையும் ஃபஹத் பாசில் தனது நடிப்பால் மட்டுமே ரசிகர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என இயக்குநர் முடிவு செய்துவிட்டாரோ என்னவோ. ஃபஹத்தின் கேரக்டருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதையிலும் திரை கதையிலும் காட்டவில்லை.  

மற்றபடி மேக்கிங், ஆக்‌ஷன் சீன்ஸ், ஃபஹத் பாசிலின் பெர்ஃபாமன்ஸ் என டெக்னிக்கலாக ஆவேசம் படத்தை அமர்க்களமாக இயக்கியுள்ளார் ஜித்து மாதவன். அதேபோல், ஃபஹத் பாசிலுடன் வரும் அம்பன், நஞ்சப்பன் உட்பட சில கேரக்டர்கள் படத்திற்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் போல சுவாசம் கொடுத்துள்ளது. படத்தின் பெரிய குறை என்றால் கல்லூரி மாணவர்கள் மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளை அதிகமாக வைத்துள்ளது தான். இதன் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருகே வெளிச்சம்.  

ஃபஹத் பாசிலின் ஆவேசத்தை கன்ட்ரோல் செய்யும் விதமாக படத்தில் வரும் அந்த ‘தந்தான தானே’ என்ற KGF பாடலின் காலர் ட்யூன் செம்ம பஞ்ச். முதல் பாதியில் விறுவிறுவென நகரும் ஆவேசம், இரண்டாம் பாதியில் ஆயாசமாக நகர்கிறது. கல்லூரி மாணவர்களாக நடித்துள்ள ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய்சங்கர், ரோஷன் மூவரும் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளனர். ஆசிஸ் வித்யார்த்தி ஒரேயொரு சீனில் வந்தாலும் அதகளம் செய்துள்ளார் மனுஷன், அம்பன் கேரக்டரில் சாஜின் கோபு, நஞ்சப்பன் கேரக்டர் இரருவரும் மிரட்டியுள்ளனர். இவர்கள் எல்லோரையும் கடந்து ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்திருப்பது ரங்காவாக வரும் ஃபஹத் பாசில் தான். வழக்கமாக வெரைட்டியாக நடிக்கும் ஃபஹத் இந்த முறை கேங்ஸ்டராக இறங்கி வந்து சிக்ஸர் அடித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow