பெண்களுக்கு எதிரான அரசு... பாஜகவை தாக்கிய சிபிஎம் பாலகிருஷ்ணன்
மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, 2036-ஆம் ஆண்டுதான் நடைமுறைப்படுத்த முடியும் என்று அறிவித்த பெண்களுக்கு எதிரான அரசு பாஜக அரசு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் வெயிலை தாண்டி அனல் பறக்கிறது அரசியல் களம்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, “உள்ளாட்சிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற்று பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். ஆனால், மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் தீர்மானம் கொண்டுவந்தபோது அதனை நிறைவேற்றிவிட்டு, 2036ஆம் ஆண்டுதான் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று பெண்களுக்கு எதிரான பாஜக அரசு அறிவித்தது” என்று பேசினார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் இபிஎஸ், ஒபிஎஸ் இருவரும் மோடிக்கு காவடித்தூக்கி 4 ஆண்டுகள் ஆட்சியை தக்கவைத்தனர். தற்போது டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர் என்று பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்களை விமர்சித்துப் பேசினார் கே. பாலகிருஷ்ணன்
What's Your Reaction?