அடகுக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.1.50 கோடி தங்க நகைகள் கொள்ளை... ஆவடி அருகே பரபரப்பு

ஆவடி அருகே அடகு கடையில் உரிமையாளரை கட்டி போட்டு ஒன்றரை கோடி மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Apr 15, 2024 - 14:52
Apr 15, 2024 - 21:27
அடகுக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.1.50 கோடி தங்க நகைகள் கொள்ளை... ஆவடி அருகே பரபரப்பு

ஆவடியை அடுத்த முத்தாப்புதுப்பேட்டை எல்லையம்மன் நகர் ஐஏஎப் சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ்.  இவர் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15) பிற்பகலில் கடையில் பிரகாஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத 4 பேர் கடைக்குள் புகுந்தனர். பிறகு அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி, பிரகாசை தாக்கியதுடன் அவரது கையைக் கட்டி போட்டனர்.

பின்னர் கடையிலிருந்து சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் நால்வரும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். 

இதையடுத்து நகைக்கடையில் கொள்ளை நடந்தது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தாப்புதுப்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்டபகலில் நகைக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு ஒன்றரை கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow