கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. 7 ஆண்டுகளாக கண்ணாமூச்சி ஆடும் குற்றவாளிகள்.. தள்ளிப்போகும் விசாரணை காரணம் என்ன?
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிப்பதில் 6 ஆண்டு காலமாக சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் விசாரணை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியை அடுத்த கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் கோடநாடு பங்களாவில் தான் ஓய்வெடுப்பார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கோடநாடு பங்களாவில் யாரும் வசிக்கவில்லை. வாட்ச்மேனும் சில ஊழியர்களும் மட்டுமே இருந்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அப்போது கொடநாடு பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அங்கே கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது..
இந்தச் சம்பவத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் இணைந்து செய்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்த போதே கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், இது குறித்த வழக்கு நீலகிரி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான 49 பேரைக் கொண்ட குழு விசாரித்து வருகிறது. மேலும், இதுவரை சிபிசிஐடி போலீசார் 189 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த போது கனகராஜ் செல்போன் டவரில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், கனகராஜின் செல்போனும் குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பெறப்பட்ட தகவல்களும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நீதிபதி அனுமதி அளித்தார். சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையில் 3 டிஎஸ்பி-க்கள், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 11 பேர் அடங்கிய சிறப்பு குழு, கோடநாடு எஸ்டேட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்டது. கொலை நிகழ்ந்த இடம், கொள்ளை நடந்த பங்களா, கோடநாடு பங்களாவின் இதர பகுதிகளை ஆய்வு செய்த குழுவினர், என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் பார்வையிட்டனர். மேலும், ஆய்வு குறித்து குழுவினர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.
இதனிடையே கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேரும், இன்று (22-04-2024) விசாரணைக்கு ஆஜராகவில்லை.
தொடர்ந்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவலதுறையினர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் விசாரணைக்கு ஆஜராகாததால், வழக்கை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் தற்போதைய நிலை குறித்து அரசுத் தரப்பில், நீதிமன்றத்தில் எடுத்துக் கூறப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்களின் விவரம் குறித்த மனு நிலுவையில் உள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் இருப்பதாலும், மாவட்ட நீதிபதி அப்துல் காதர் வேறு பணியில் இருப்பதாலும், இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கோடநாடு பங்களாவில் கொள்ளையும் அதைத் தொடர்ந்து கொலையும் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டு காலமாக வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் என சிலர் கைது செய்யப்பட்டாலும் அதற்கு காரணகர்த்தா யார் என்பதில் மர்மம் நீடிக்கிறது. மர்மம் எப்போது விலகும்? உண்மை குற்றவாளிகள் யார் என்று அறிந்து கொள்ள அதிமுகவினர் ஆர்வமாக உள்ளனர்.
What's Your Reaction?