அந்தமானை போல் தமிழகத்திலும் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும்..தீப்பெட்டி உரிமையாளர்கள் கோரிக்கை

அந்தமான் நிக்கோபாரில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவனிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Apr 30, 2024 - 21:49
அந்தமானை போல் தமிழகத்திலும் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும்..தீப்பெட்டி உரிமையாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் மிக முக்கியத் தொழிலாக இருப்பது தீப்பெட்டி தொழில். இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் 90% தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் அந்நிய செலவாணியையுதம் தீப்பெட்டி தொழில் ஈட்டி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை முற்றிலுமாக முடங்கிப் போகும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. 

ரூ.20க்கு குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்த போதிலும் தடையை தாண்டி தற்போது சீனா சிகரெட் லைட்டர்கள் கடத்தி வரப்பட்டு, முன்பை விட விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. இது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் அதனை கண்டித்து அண்மையில் பத்து நாட்கள் வேலை நிறுத்த போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். 

அப்போது அந்தமான் நிக்கோபாரில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது போல், தமிழகத்திலும் தடை விதிக்கவேண்டும் என்றும் இதை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். 

கிராமப்புற தொழில்துறை அமைச்சர் அன்பரசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow