Kohli: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீதான்...கோலிக்குப் புகழாரம் சூட்டிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீதான் என விராட் கோலிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வெஸ் ஹால்.

Jun 21, 2024 - 15:47
Kohli: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீதான்...கோலிக்குப் புகழாரம் சூட்டிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டிக்கு முன்பாக இந்திய அணியினர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வெஸ் ஹாலை சந்தித்தனர். அப்போது Answering the call என்ற தனது சுயசரிதையை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி போன்றோருக்கு வெஸ் ஹால் கையெழுத்திட்டுக் கொடுத்தார். விராட் கோலியுடன் சிறிது நேரம் உரையாடிய அவர், ”உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீதான்” என்று புகழரம் சூட்டினார். 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் வெஸ் ஹால். பார்படாஸை சேர்ந்த இவர், அடிப்படையில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய போது, ஒருமுறை முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டதால் , வேகப்பந்து வீச்சாளராக வெஸ் ஹால் அவதாரமெடுத்தார். வேகப்பந்து வீச்சு பிடித்துப் போகவே, விக்கெட் கீப்பிங்கை விட்டுவிட்டு, முழு நேரமாக வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 48 டெஸ்டுகளில் விளையாடிய வெஸ் ஹால், 26.38 என்ற சராசரியில் 192 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

சக வேகப்பந்து வீச்சாளர் சார்லி கிரிஃபித்துடன் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களில் விலா எலும்புகளை உடைப்பதில் வெஸ் ஹால் புகழ்பெற்றவர். அவர் ஓடிவரும் போதே நிறைய பேட்ஸ்மேன்கள் அச்சத்தில் தடுமாறுவதை இப்போதும் யூடுயூப் வீடியோக்களில் பார்க்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பார்படாஸ் நாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சராக வெஸ் ஹால் பணியாற்றினார்; தனது வாழ்க்கை அனுபவங்களை Answering the call என்ற பெயரில் சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதற்கு இந்திய அணி பார்படாஸ் சென்றது. 

போட்டிக்கு முந்தைய நாள், இந்திய அணி வீரர்களை சந்தித்த வெஸ் ஹால், தனது சுயசரிதை புத்தகத்தை ராகுல் திராவிட், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்களிடம் கொடுத்தார். ராகுல் திராவிட், ரோஹித் சர்மா போன்றவர்கள் ஒவ்வொருவராக வந்து வெஸ் ஹாலிடம் வாழ்த்துகளைப் பறிமாறிவிட்டு புத்தகத்தைப் பெற்று சென்றனர்.  இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை சந்தித்த வெஸ் ஹால், “நான், நிறைய தலைசிறந்த பேட்ஸ்மேன்களுடன் விளையாடியிருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் தான் தலைசிறந்த பேட்ஸ்மேன்” என்று புகழாரம் சூட்டினார். வெஸ் ஹாலுடன் பேசிக் கொண்டிருந்த போது உச்சபட்ச நாகரிகத்தையும் மரியாதையையும் கோலி வெளிப்படுத்தியது, வெஸ் ஹாலை மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் வரை நின்று கொண்டேயிருந்த கோலி, கடைசி சில நொடிகளில் தான் அமர்ந்தார். கோலியுடன் அன்பைப் பரிமாறிக் கொண்ட வெஸ் ஹால், “ உலகின் தலைசிறந்த வீரர் நீங்கள். நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை” என்றார். மேலும் விரையில் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடிக்கவும் வெஸ் ஹால் தனது வாழ்த்துகளை கோலியிடம் தெரிவித்தார். 86 வயதான கிரிக்கெட் ஜாம்பவான் வெஸ் ஹால், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியிடம் காட்டிய பரிவும் அதற்கு விராட் கோலி கொடுத்த மரியாதையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow