தொடரை கைப்பற்றியது இந்தியா..! - இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் வெற்றி

Feb 26, 2024 - 16:11
தொடரை கைப்பற்றியது இந்தியா..! - இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் 3 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், ராஞ்சியில் கடந்த 23ஆம் தேதி தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் முதல் இன்னிங்சில் துருவ் ஜூரல் (90), ஜெய்ஸ்வால் (73) ரன்களை எடுத்திருந்தனர்.

இறுதியில் 2-வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 4-வது நாள் உணவு இடைவெளிக்கு முன்னதாகவே 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றிக்கு தேவையான 192 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 55 ரன்களும், சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரவிசந்திரன் அஸ்வின் படைத்தார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 7 - 11-ஆம் தேதி வரை தரம்சாலாவில் நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow