இறுதி டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் விலகல்.. வாய்ப்பை பயன்படுத்துமா இந்தியா?
கியா ஓவல் மைதானத்தில் நாளை நடைப்பெற உள்ள இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்ற நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி நாளை கியா ஓவல் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் உட்பட இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த 4 இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆடும் பிளேயிங் 11 அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக ஓலி போப் இங்கிலாந்து அணியினை தலைமையேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் கவனம் ஈர்த்த இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோரும் இறுதிப்போட்டிகான அணியில் இடம்பெறவில்லை.
இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 6-வது இடத்தில் பேட்டிங் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கஸ் அட்கின்சன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோருடன் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டோங்குவும் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளனர்.
5-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியின் பிளேயிங் 11
1. சாக் கிராலி
2. பென் டக்கெட்
3. ஓலி போப் (கேப்டன்)
4. ஜோ ரூட்
5. ஹாரி புரூக்
6. ஜேக்கப் பெத்தேல்
7. ஜேமி ஸ்மித் (துணை கேப்டன்)
8. கிறிஸ் வோக்ஸ்
9. கஸ் அட்கின்சன்
10. ஜேமி ஓவர்டன்
11. ஜோஷ் டங்
நாளை நடைப்பெற உள்ள இறுதிப்போட்டியினை இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரிஷப் பந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பும்ரா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியது. இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் விளையாடாத நிலையில் இறுதி டெஸ்ட் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






