ஐபிஎல் - முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ...

சிறப்பாக பந்துவீசிய லக்னோ வீரர் மயங்க் யாதவ், ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Mar 31, 2024 - 05:51
ஐபிஎல் - முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ...

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச்-30) ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

17-வது ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 30) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. டாஸை வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 

தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக்  மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாடிய நிலையில், கே.எல்.ராகுல் 15 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 9 ரன்களும், மார்க்கஸ் ஸ்டாயின் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதுவரை அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக்,  2 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் 42 ரன்களும், குருனால் பாண்டியா 43 ரன்களும் அடித்து பஞ்சாப் அணியின் பந்துகளை பறக்க விட்டனர். 
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி வீரர் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும் , அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து 200 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் பணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கி அதிரடி காட்டினர். இதில், பேர்ஸ்டோவ் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 19 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதேநேரம் இறுதிவரை போராடிய தவான், 3 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் என 70 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

ஆனால், அடுத்து வந்த வீரர்கள் சரியாக ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 178 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் சிறப்பாக பந்து வீசிய மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஏற்கனவே தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதி தோல்வி அடைந்த லக்னோ அணி, 2-வது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திற்கு லக்னோ அணி முன்னேறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow