குளம் போல் காட்சி அளிக்கும் கொரட்டூர் இஎஸ்ஐ அலுவலகம், மருந்தகம்- மக்கள் அவதி
நோயாளிகள் அச்சத்துடனே தண்ணீரில் நடந்து சென்று வருகின்றனர்.
கொரட்டூர் இஎஸ்ஐ அலுவலகம் மற்றும் மருந்தகம் முழுவதும் தண்ணீரால் முழ்கி குளம் போல் காட்சியளிப்பதால் மக்கள் மருந்தகம் போக முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
சென்னை கொரட்டூரில் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தலைமையில் இயங்கி வரும் கொரட்டூர் கிளை அலுவலகம் மற்றும் மருந்தகம் முன் மழைநீர் இரண்டு அடி அளவிற்கு தேங்கியுள்ளது.
இதனால் மருந்தகத்திற்கு மற்றும் இஎஸ்ஐ விடுப்பு விண்ணப்பம் பெறுவதற்கு செல்வோர் முட்டிக்கால் அளவு நீரில் நடந்து சென்று மருந்துகளை பெற்றுக்கொண்டு திரும்புகின்றனர்.
மேலும் அலுவலகத்தில் நீர் சூழ்ந்துள்ளதால் மருந்துகள் நீரால் நனைந்து உள்ளது.மேலும் நீர் சூழ்ந்து இருப்பதால் ஊழியர்கள் செல்ல முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த அலுவலகத்தில் தேங்கி இருக்கும் மழைநீர் அகற்ற எந்த நடவடிக்கையும் மாநகராட்சி அதிகாரிகளும் எடுக்கடக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
தேங்கி நிற்கும் மழை நீரில் கழிவுநீர் கலந்திருப்பதால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், இந்த தண்ணீரில் பாம்புகள் மற்றும் பூச்சிகள் போன்றவை வருவதால் நோயாளிகள் அச்சத்துடனே தண்ணீரில் நடந்து சென்று வருகின்றனர்.எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?