கனமழையால் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்- ரூ.15 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு
இதே நிலை நீடித்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும் சொல்லப்படுகிறது
வங்கக்கடலில் புயல் உருவானதை தொடர்ந்து மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்கச்செல்லாதததால் ரூ.15 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமாகியுள்ள நிலையில் மாலத்தீவு அருகே ஒரு காற்றுச்சுழற்சி, இலங்கை அருகே ஒரு காற்றுச்சுழற்சி மற்றும் அந்தமான் தீவு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை என உருவாகி கடலோர மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட விசைப்படகு, பைபர் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீன்வர்கள் உடனடியாக கரை திரும்பவும், நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி நேற்று 2வது நாளாக இரு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தங்களுடைய விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.இதனால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரு மாவட்டங்களிலிருந்தும் மத்தி, கானாங்கெழுத்தி, இறால், கணவா, திருக்கை, பாறை, வாவல், வஞ்சிரம் மற்றும் நண்டு ஆகிய மீன்வகைகள் பிடித்து வரப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது மீன் பிடிக்கச்செல்லாததால் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் இன்னும் சில தினங்களுக்கு கடலுக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் 2 தினங்களில் சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.இதே நிலை நீடித்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
-ஆர்.விவேக் ஆனந்தன்
What's Your Reaction?