பாலியல் தொல்லை புகார்.. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?.. நீதிபதி சரமாரி கேள்வி…
பாலியல் தொல்லை புகாரில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என ஹோமியோபதி துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ரேஷ்மி எம் நாயர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் "நான் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகிறேன். கடந்தாண்டு ஜூன் மாதம் ஆண்டனி சுரேஷ் என்பவர் நிலைய மருத்துவ அலுவலராக பணியில் சேர்ந்தார். சில நாட்களிலேயே எனக்கு தேவையற்ற முறையில் பரிசு வழங்குவது, அலுவல் தாண்டி வேறு விஷயங்களை பேச முயல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு தேவையற்ற குறுந்தகவல்களை அனுப்புவது, அதில் புளூ டிக் காட்டியவுடன் மொத்தமாக அழித்து விடுவது என இந்த வழக்கத்தை தொடர்ந்து வந்தார். மேலும், அலுவல் ரீதியாக பேசக்கூட அவரது தனிப்பட்ட எண்ணையே தொடர்பு கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதனால் அதிக மன உளைச்சல் ஏற்பட்டு ஆண்டனி சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னிடம் மட்டுமின்றி, இங்கு பயிலும் மாணவிகளிடமும் இதேபோல பாலியல் தொல்லைகளில் அவர் ஈடுபட்டது தெரிய வந்ததால், கோட்டாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஆண்டனி சுரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது வேறு துறை ரீதியான நடவடிக்கையோ, காவல்துறை நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை" என குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், "கல்லூரியின் முதல்வர் கிளாரன்ஸ் டேவியும் ஆண்டனி சுரேஷுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். எனவே எனது புகார் மனுவின் அடிப்படையில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் கிளாரன்ஸ் டேவி மற்றும் நிலைய அலுவலராக பணிபுரிந்த ஆண்டனி சுரேஷ் ஆகியோர் மீது சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் மற்றும் இந்திய மருத்துவத் துறையின் ஆணையர், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
What's Your Reaction?