கட்சிகளின் கதை சொப்பன சுந்தரி போல் ஆகிவிட்டது! யார் வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை ..? சீமான் கலாய்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது அரசியல் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தும், நாட்டுப்புறப் பாடல் பாடியும் வாக்குசேகரித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் நா.த,க நாடாளுமன்ற வேட்பாளராக எழிலரசி தேர்தலில் களம் காண்கிறார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி மற்றும் திருப்பத்தூரில் பரப்புரை செய்தார். இதன்படி, திருப்பத்தூருக்கு வந்த சீமான், வேலு நாச்சியார் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் தொண்டர்கள் மற்றும் மக்கள் முன் பேசிய அவர், இங்கு எம்.ஜி.ஆர் சிலை பெரிய அளவில் அமைக்கப்பட்டிருக்கிறது, ஆனால், வேலு நாச்சியாருக்கு சிறிய சிலையே அமைத்துள்ளனர் என விமர்சித்தார். அத்துடன் தான் ஆட்சிக்கு வந்தால், சென்னை விமான நிலைய வாயிலிலே வேலுநாச்சியாருக்கு சிலை வைப்பேன் என உறுதியளித்தார். மேலும், பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இம்முறை ஒரு வாய்ப்பு தாருங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, எழிலரசியை ஆதரித்து காரைக்குடியில் பரப்புரை மேற்கொண்ட சீமான், தற்போதுள்ள கட்சிகள் இந்த கூட்டணியா அந்த கூட்டணியா என சொப்பன சுந்தரி கதை போல செயல்படுகிறார்கள், அதனால் அவர்களை யார் வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை என விமர்சித்தார்.
அதைதொடர்ந்து பேசிய அவர், திமுக நீட்டை ஒழிப்பேன் என வெற்று வாக்குறுதி அளித்துள்ளார்கள் என்றும், நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் அதனை ஆதரித்தது திமுக என்றும் தெரிவித்தார். மேலும், பாஜக நாட்டைக் கூறுபோட்டு விட்டதாகவும் விமர்சனங்களை முன்வைத்தார். இறுதியாக நாட்டுப்புற பாடல் பாடிய சீமான், தங்கள் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
What's Your Reaction?