வெள்ளியங்கிரி மலையேறிய மூவர் உயிரிழப்பு... எச்சரிக்கும் வனத்துறை...
வெள்ளியங்கிரி மலை ஏறியவர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பக்தர்கள் தங்களது உடல் நிலையை பரிசோதனை செய்த பின்னர் மலையேற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கம் வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ளதால், அதனை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்னம் உள்ளனர். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபடுகின்றனர். அந்த வகையில், இந்தாண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர்கள் சிலர் உயிரிழந்ததால், வனத்துறையினர் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைத்து, பக்தர்கள் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மலை ஏற அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மலை ஏறிய பக்தர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், மார்ச் 25ம் தேதி வெள்ளியங்கிரி மலை ஏறிய ஐதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ்(68), சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35), தேனியை சேர்ந்த பாண்டியன்(46) ஆகியோர் திடீரென உடல் நலம் பாதிக்கபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு மட்டும் இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் வெள்ளயங்கிரி மலை ஏற்றத்தின் போது உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மூவரின் உடல்களையும் மீட்ட வனத்துறையினர், ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆண்டு தோறும் மலை ஏறுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டும், உடல் நிலை பாதிக்கபட்டும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. மலை ஏற அனுமதிக்கப்படும் நாட்களில் மட்டும் அடிவாரத்தில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்காமல், அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர மருத்துவமனை அமைத்திட வேண்டும் என பக்தர்களின் கோரிக்கை வைத்துள்ளனார்.
What's Your Reaction?