அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கப்போறீங்களா? குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை
தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1160 குறைந்து ரூ. 53,600 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏறுமுகமாகவே இருந்தது. சவரனுக்கு 5000 ரூபாய் வரை கடந்த மாதம் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. நேற்றும் இன்றும் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,960க்கும் விற்பனையானது. ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் கடந்த 20ஆம் தேதியன்று ஒரு கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,890க்கு விற்பனையானது. 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் உச்சப்பட்ச விலை உயர்வாகும். இது நகை வாங்கும் இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 சதவிகிதம் அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவிகிதம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது, சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவது, சீன இளைஞர்கள் மத்தியில் தங்கத்தின் மோகம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர காரணமாக இருந்தது.
தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது. தங்கம் விலை நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,845க்கும், சவரன் ரூ.54,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.145 குறைந்து ரூ. 6700 ஆக விற்பனையாகிறது. தங்கம் அதிரடியாக ஒரு சவரனுக்கு ரூ.1160 குறைந்து ரூ. 53,600 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளதால் அட்சய திரிதியை நாளில் தங்கத்தை வாங்க நினைக்கும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
What's Your Reaction?