திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா?... 2 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்... முழு விவரம்!
திருவண்ணாமலை கோயிலுக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 30 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி. கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 600 சிறப்பு பேருந்துகளும், நாளை (சனிக்கிழமை) 410 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை 80 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதேபோல் பெங்களூரு, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற இடங்களில் இருந்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த 2 நாட்களும் 200 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
இதுதவிர இன்று (வெள்ளிக்கிழமை) பெளர்ணமி நாள் என்பதால் திருவண்ணாமலை கோயிலுக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 30 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்றும், நாளையும் 30 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று 30 சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படஉள்ளன. கோவை, நெல்லை, மதுரை, ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றன.
இதுதவிர ஞாயிற்றுக்கிழமை அன்று நெல்லை, கோவை உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்க இன்று 6,447 பயணிகளும், நாளை 3,318 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 6,065 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், www.tnstc.in என்ற இணையதளத்திலும், மொபைல் செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.
What's Your Reaction?