சிவகாசியில் மழைக்காக ஒதுங்கிய இளைஞர்.. இடி,மின்னல் தாக்கி பரிதாப பலி.. 3 பேர் படுகாயம்

May 6, 2024 - 10:19
சிவகாசியில் மழைக்காக ஒதுங்கிய இளைஞர்.. இடி,மின்னல் தாக்கி பரிதாப பலி.. 3 பேர் படுகாயம்

சிவகாசியில் மழைக்காக பேருந்து நிலையத்தில் ஒதுங்கியவர்களை இடி மின்னல் தாக்கியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்த மாரிமுத்து அவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் உதவிக்காக  அவரது  37 வயது மகன் வேல்ஈஸ்வரனை தொழிலில் ஈடுபடுத்தி  வந்தார். இந்த நிலையில் வேல்ஈஸ்வரன் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பூவநாதபுரம் பஸ் நிறுத்தம் வந்து கொண்டிருந்தபோது பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது.

அப்போது அவர் பஸ் நிறுத்தத்தில் ஒதுங்கி நின்றார்.அப்போது அவருடன் முருகேஸ்வரன் , விக்னேஷ் , சேவியர்ராஜ் ஆகியோரும் சேர்ந்து பஸ் நிறுத்தத்தில் மழைக்காக ஒதுங்கியுள்ளனர்.

அப்போது அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி,மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வேல்ஈஸ்வரன்  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில்  முருகேஸ்வரன், விக்னேஷ், சேவியர்ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

பின்னர் உயிரிழந்த வேல் ஈஸ்வரன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த உறவினர்கள் வேல் ஈஸ்வரன் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow