மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு பங்குனி அமாவாசையில் ஊஞ்சல் உற்சவம்.. நள்ளிரவில் ஒளிர்ந்த தீபங்கள்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் பங்குனி அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்த அம்மன் இங்கு வந்தது பற்றி புராண கதை ஒன்று உள்ளது.
ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன், திலோத்தமை என்ற தேவ மங்கையின் அழகில் மயங்கி அவளைத் துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள். பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மனின் ஆணவத்தை அழிக்க, விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பிரம்மனது ஒரு தலையை சிவபெருமான் வெட்டி எறிந்தார். ஆனால், அது மீண்டும் மீண்டும் முளைக்கவே, அதனைத் தன் கையிலேயே தாங்கிக் கொண்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. சிவனின் உருவமே பொலிவு இழந்தது.
பிரம்மனின் மனைவியான சரஸ்வதி சாபமிடவே, சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல வடிவத்தையும் பெற்றனர். இதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், 'கலங்காதே! நீ மலையரசன் பட்டினத்தில் பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்' என வழிகாட்டினார். அங்காளபரமேஸ்வரியாக அகோர உருவம் கொண்ட அன்னை பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள்.
அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள். பூங்காவனத்தில் பெரிய புற்று இருப்பதைக் கண்டு, மலையரசன் அதனை இடிக்க ஆள் அனுப்பினான். அந்த ஆட்கள் அனைவரையும் அன்னை புற்றுக்குள் மறைந்தாள். மீண்டும் ஆள் அனுப்ப, அவர்களும் புற்றுக்குள் மறைந்தனர். இதைக் கண்டு அஞ்சிய மலையரசன், தன் தவறை உணர்ந்து புற்றை வணங்கி, நின்றபோது காட்சி கொடுத்தாள் அன்னை.
அந்த நேரத்தில் மேல்மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி, விஷ்ணுவை மனதில் நினைத்து தவம் செய்தாள். விஷ்ணுவின் ஆலோசனைப்படி, விநாயகப்பெருமானைக் காவல் நிற்கச் செய்து, அன்னபூரணி மூலம் சுவையான உணவைச் சமைத்து, அதை மூன்று கவளமாக்கினாள். இரண்டு கவளங்களைச் சிவனின் கையில் இருந்த கபாலத்திற்கு ஊட்ட, அதன் சுவையில் மயங்கிய கபாலம் ஆசை தீர உண்டது.
மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே கீழே தவற விட, சுவையில் மயங்கிய கபாலம் தரையிறங்கியது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அன்னை அங்காள பரமேஸ்வரி, கபாலத்தைத் தன் காலால் நசுக்கித் தரையில் அழுத்தினாள். உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார். இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அனைத்து ஊர் மயானங்களிலும் மயானக்கொள்ளை உற்சவம் நடத்தப்படுகிறது.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி பிரம்மனின் தலையை தன் காலால் மதித்து சிவனை பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுவிக்கின்றாள். இதனால் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்தி படுத்தவே அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தியடையச் செய்கின்றனர். அமாவாசை நாளில் ஊஞ்சல் உற்சவத்தில் மகிழ்ந்திருக்கும் அங்காளம்மனைக் காண வரும் பக்கதர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது. வளமும் நலமும் தருவாள் அங்காளம்மன் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பங்குனி அமாவாசையை முன்னிட்டு நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூரில் குவிந்தனர். அலங்கார ரூபினியாக ஊஞ்சலில் ஆடிய அம்மனை தீபங்களை ஏற்றி வழிபட்டனர். நள்ளிரவில் லட்சக்கணக்கான தீபங்கள் ஒளிர மகிழ்வுடன் ஊஞ்சல் ஆடினாள் அங்காளம்மன்.
What's Your Reaction?